search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண விவகாரம்"

    • படுகொலை சம்பவம் குறித்து கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
    • கைது செய்ய இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    முதுகுளத்தூர்:

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் கீர்த்தி வாசன் (வயது22). இவர் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    கீர்த்தி வாசனின் நண்பர் கொழுந்தூரை சேர்ந்த தினேஷ்குமார் (21). இவர் கீழத்தூவல் பகுதியை சேர்ந்த அபினேஷ் (23) என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.35ஆயிரம் கடன் வாங்கியிருக்கிறார். அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு தினேஷ்குமாரும், கீர்த்தி வாசனும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். திருவரங்கம் மதுக்கடை அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது, தினேஷ் குமாருக்கு பணம் கொடுத்த அபினேஷ் தனது நண்பர்கள் 5 பேருடன் காரில் வந்திருக்கிறார்.

    அவர் தினேஷ் குமாரை வழிமறித்து நிறுத்தி தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டிருக்கிறார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தினேஷ்குமார் மற்றும் கீர்த்தி வாசன் அங்கிருந்து தங்களது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.

    இதையடுத்து அவர்களை அபினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் காரில் பின் தொடர்ந்தனர். அவர்கள் கீர்த்தி வாசன் மற்றும் தினேஷ்குமார் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது காரால் மோதினர். இதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதனை தொடர்ந்து காரால் மோதிய அபினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    கார் மோதியதால் தூக்கி வீசப்பட்டதில் படுகாய மடைந்த கீர்த்தி வாசன் சம்பவ இடத்திலேயே பலியானார். தினேஷ்குமார் படுகாயமடைந்து ரோட்டில் விழுந்து கிடந்தார். அவரை அந்த பகுதியில் நின்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காரால் மோதி கீர்த்தி வாசன் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தகவலறிந்த முதுகுளத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்ன கண்ணு, கீழத்தூவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கீர்த்திவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த படுகொலை சம்பவம் குறித்து கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். கீர்த்திவாசன் கொலை தொடர்பாக அபினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சூர்யா என்கிற சிவசுப்பிர மணியன்(24), கிருஷ்ண மூர்த்தி(26), துரை(24), மலை கிருஷ்ணராம்(24), வெங்கடேஷ்(26) ஆகிய 6 பேரை போலீசார் தேடி வந்தனர்.

    அவர்களை கைது செய்ய இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் அபினேஷ், சூர்யா, கிருஷ்ண மூர்த்தி, துரை, மலை கிருஷ்ணராம் ஆகிய 5 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வெங்கடேசை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பண விவகாரத்தில் நண்பருடன் சென்ற வாலிபர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் கீழத்தூவல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×